நான்

தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 4 கப் (நன்றாக சலித்துக் கொள்ளவும்)
ஈஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் (டிரை ஈஸ்ட் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும்)
நெய், சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஆப்ப சோடா - அரை டீஸ்பூன்
உப்பு - முக்கால் டீஸ்பூன்
பால், தயிர் - அரை கப் (தலா)

செய்முறை : சர்க்கரையுடன் ஈஸ்ட் மற்றும் வெதுவெதுப்பான பால் சேர்த்து 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பிறகு, இத்துடன் தயிர் சேர்த்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். கலவை நன்றாக புளித்து நுரை வந்திருக்கும்.

மைதாவுடன் உப்பு, ஆப்ப சோடா, ஈஸ்ட் கலவை, சிறிது தண்ணீர் கலந்து சற்று இளக்கமாகப் பிசையவும். இந்த மாவை 5 முதல் 6 மணி நேரம் வரை மூடி வைத்திருந்தால் மாவு 2 மடங்கு நுரைத்திருக்கும்.

இதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து முக்கோண வடிவத்தில் கால் அங்குல கனத்தில் தேய்க்கவும். அதன் ஒரு பக்கத்தில் தண்ணீரை தடவிக் கொள்ளவும்.தவாவை சூடேற்றி தண்ணீர் தடவிய பக்கம் கல்லில் படுமாறு போடவும்.மிதமான தீயில் வேகும்போது மேல்பக்கம் சின்ன சின்னதாய் குமிழ்கள் உருவாகும்.

பிறகு தோசைக் கல்லோடு அப்படியே திருப்பி நாணின் மேல்புறத்தை தீயில் காட்டி வேகவிடவும். 2 பக்கமும் வாட்டிய பின் கத்தியால் எடுக்க நாண் சுலபமாக வந்து விடும். இப்போது அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவினால் ஹோட்டல் டேஸ்ட் உள்ள நாண் வீட்டிலேயே ரெடி!